top of page

பரந்தூர் விமான நிலையம் உண்மையில் தமிழகத்திற்கு தேவையா?ஒரு திணயியல் பார்வை

3 hours ago
5 min read

 

பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் எதிர்காலப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்; தொழில் முதலீடுகள் பெருகும்; சரக்குப் போக்குவரத்து வளரும்; பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரும்; ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பன இதற்கான முக்கிய வாதங்கள். இந்த வாதங்களில் சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் அவை ஒரு முக்கியமான கேள்விக்கு விடை அளிப்பதில்லை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம்தானா?

 

ஒரு விமான நிலையம் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் பயனுள்ளதாக இருப்பது, அது எந்த இடத்திலும் எந்த விலைகோள் (cost) கொடுத்தும் அமைக்கப்படலாம் என்று பொருளல்ல. எனவே பரந்தூர் திட்டத்தை விமானப் போக்குவரத்து என்ற குறுகிய கோணத்தில் அல்லாமல், நிலம், நீர், உணவு, வேலைவாய்ப்பு, உயிரிப்பன்மயம், நகரமயமாக்கல், வணிகம், பொருளியல், எதிர்காலத் தலைமுறைகளின் நலவாழ்வு ஆகிய அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

 

சென்னையின் விமானப் போக்குவரத்தைப் பெருக்குவதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்ற கருத்து தொடர்ந்து வளர்ச்சிப்பற்றாளர்களால் முன்வைக்கப்படுகிறது. எனவே வசதிபடைத்தவர்கள் பயணிக்கக் கூடுதல் விமான நிலையத் திறன் தேவைப்படலாம். ஆனால் “புதிய திறன் தேவை” என்பதிலிருந்து “பரந்தூரில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும்” என்ற முடிவை, இன்றைய காலநிலை மாற்றக் காலகட்டதில் போகிறபோக்கில் எடுத்துவிட முடியாது.

ஏனெனில் பரந்தூர் விமான நிலையம் வேண்டுமா? என்ற கேள்விக்குள் சென்னை வேண்டுமா? என்ற கேள்வியை இயற்கை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 

விமான நிலையம் யாருக்காக என்பது அடுத்த கேள்வி. விமான நிலையத்தின் பயன் பயணம் செய்பவர்களோடு மட்டும் முடிவதில்லை. அது பன்னாட்டு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர், தகவல்நுட்பம் (IT), தன்னூர்தி நிறுவனங்கள் மின்னியல் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், சரக்குக்கையாள்மைகள், உணவகங்கள், நிலவிற்பனையர் ஆகியோருக்கான பெரும் பொருளியல் உட்கட்டமைப்பாக இருக்கும்.

இதனால் விமான நிலையம் மக்களின் போக்குவரத்து வசதி மட்டுமல்ல; மூலதனத்தின் இயங்கெந்திரமாகவும் இருக்கும். இதில் தவறு இல்லை. ஆனால் இந்தக்கட்டமைப்பிற்காக இழக்கப்போவது யார்? அதன் பயனை யார் அதிகமாகப் பெறுகிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும்.

 

பரந்தூர் விமான நிலையம் கட்டப்பட்டால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது உண்மை. பெரும் முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால் வேலைவாய்ப்பை என்பதை விமான நிலையம் மட்டுமா உருவாக்கும்? அதே நிலப்பரப்பில்  வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, நெசவு, கைவினை, விதை உற்பத்தி, சிறுகுறு தொழில்கள், உள்ளூர் சந்தைகள் போன்றவற்றை இணைத்த உள்ளூர் உயிரியப் பொருளியலை (Biological Economy) உருவாக்கும்போது அதிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே “எத்தனை வேலைவாய்ப்புகள்?” என்பதோடு விவாதம் முடிவதில்லை. “எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள்? யாருக்கு? எவ்வளவு காலத்திற்கு? அந்த வருமானத்தில் எவ்வளவு உள்ளூர் பொருளாதாரத்தில் தங்குகிறது?” என்பதும் கணக்கிடப்பட வேண்டும்.

ஒரு நச்சுயிரி (வைரஸ்) ஒரு போர் அனைத்து விமானங்களையும் ஓய்வறைகளுக்கு அனுப்பிய கதைகளைக் கண்டுள்ளோம்.

 

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விமான நிலையமாக மாற்றும்போது அதன் தற்போதைய சந்தை மதிப்பை மட்டுமே வைத்துக் கணக்கிடலாமா? ஒரு நிலப்பரப்பு உணவு, வேலை, நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் ஊடுருவல், உயிரிப்பன்மயம், உள்ளூர் சந்தை, சமூக வாழ்வு ஆகியவற்றை ஆண்டுதோறும் உருவாக்குகிறது. இவை அனைத்தும் சேர்ந்து அதன் சமூகச் சூழலியல் மதிப்பை உருவாக்குகின்றன. ஒரு விமான நிலையம் கட்டப்பட்டவுடன் இவற்றில் சில முற்றிலும் மறையும்; சில கடுமையாக மாறும். எனவே நிலத்தின் விலை என்பது நிலத்தின் முழுமையான மதிப்பு அல்ல.

 

பரந்தூர் பகுதியின் மிக முக்கியமான சூழலியல் பிரச்சினை அதன் நீரியல் அமைப்பு. ஏரிகள், குளங்கள், தாழ்நிலங்கள், வெள்ள வடிகால் அமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவற்றை தனித்தனி நீர்நிலைகளாகப் பார்ப்பது தவறு. அவை ஒரு முழுமையான நீர்த்தாங்கல் அமைவின் (watershed system) கண்ணிகள். மழை பெய்யும்போது மழைநீர் நிலத்தில் ஊடுருவி வடிகால்கள் வழியாக மெதுவாக வெளியேறுகிறது. இந்த இயற்கையான அமைப்பை மிகப்பெரிய கட்டுமானங்கள் அமையும்போது  நீர் நிலத்துள் ஊடுருவுவது குறைந்து, மேற்பரப்பு நீரோட்டம் அதிகரித்து, இயற்கையான நீர்த்தேக்கத் திறன் குறைந்து, வெள்ள அபாயம் அதிகரிக்கும்.

 

பள்ளிக்கரணை இதைத்தான நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இது நமக்கு இயற்கை கொடுத்துள்ள முன்னெச்சரிக்கை. கட்டற்ற நகர வளர்ச்சியால் பள்ளிக்கரணை ஈரளம் (wetland) பெருமளவில் சுருங்கியிருக்கிறது. அதன் விளைவாக சென்னையின் வெள்ளத் தாங்கும் திறன், நீர் சுழற்சி, பறவைகளின் புழங்கிடம் (habitat), உயிரிப்பன்மயம் வளம், நிலத்தடி நீர் அமைப்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஈரளத்தை அழிப்பது ஒரு காலி நிலத்தைப் பயன்படுத்துவது அல்ல; அது ஓர் இயற்கை உட்கட்டமைவை அழிப்பதாகும். பள்ளிக்கரணையில் செய்த தவறை இன்னும் பெரிய அளவில் பரந்தூரில் மீண்டும் செய்யக்கூடாதா என்ற கேள்வி முன்னெழுகிறது.

 

பரந்தூரின் சூழலியல் மதிப்பு மனிதர்களுக்கான பயன்களில் மட்டும் முடிவதில்லை. மனிதரல்லாத அதேநேரத்தில் மக்களுக்குப் பயன்படும் உயிரனங்களின் (மீன்கள், தவளைகள், நீர்ப்பாம்புகள், நத்தைகள், நீர்வாழ் பூச்சிகள், தட்டான்கள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள்) என எண்ணற்ற உயிர்களின் பயன்களிலும் உள்ளது. ஒரு புழங்கிடம் அழிந்தால்  அவை எங்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் என்னால் அவற்றுக்கு நீதிமன்றங்களுக்குப் போகத்தெரியாது.

 

சென்னை ஏற்கெனவே வெள்ளத்திற்கும் இலக்காகிறது, தண்ணீர்ப் பற்றாக்குறைக்கும் இலக்காகிறது. சென்னையைக் காப்பாற்ற வீராணத்தில் இருந்தும், ஆந்திரத்தில் இருந்தும் நீர் கொண்டு வரவேண்டியயுள்ளது. இந்நிலையில் புதிய விமான நிலையத்தைச் சுற்றி சாலை, ரயில், தொழில், குடியிருப்புகள் என புதிய நகர்ப்புற விரிவாக்கம் ஏற்பட்டால், பிரச்சினை விமான நிலைய எல்லைக்குள் மட்டும் இருக்காது. அது ஒரு புதிய நகரமயமாக்கம் உருவாகும். அதை நம்பிக் குடியேறும் மேலும் லட்சக்கணக்காக மக்களுக்கான குடிநீர், வடிகால் இரண்டையும் சென்னை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.

 

இன்னொரு அடிப்படைக் கேள்வியும் நம்முன் எழுகிறது, ஏன் எல்லாவற்றையும் சென்னையிலேயே குவிக்க வேண்டும்?

 

சென்னையில் ஏற்கெனவே துறைமுகம், தொழில், தகவல்நுட்பம், கல்வி, நிதி, நிர்வாகம், போக்குவரத்து ஆகியவற்றின் மிகப்பெரிய பொருளியக் குவியலை உருவாக்கியுள்ளோம். இதனால் ஒரு கொழுந்திரள் பொருண்மியத்தை (agglomeration economy) உருவாகியுள்ளது. நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதால் திறமையான தொழிலாளர்கள், சந்தைகள் ஆகியவை எளிதாகக் கிடைக்கின்றன. இதனால் மேலும் நிறுவனங்கள் குவிகின்றன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்தக் குவிப்பு நெரிசல் வீண்பொருண்மியத்தை (congestion diseconomy) உருவாக்குகிறது. நில விலை உயர்வு, போக்குவரத்து நெரிசல், நீர் தேவை, கழிவுப்பெருக்கம், காற்று மாசு, வெள்ள அபாயம், ஆகியவை அதிகரிக்கின்றன.

 

ஆக, சென்னை வளரக்கூடாது என்பதல்ல; சென்னை மட்டுமே வளர வேண்டும் என்பதுதான் கேள்விக்குரியது.

 

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பொருளாதார மையங்கள் உள்ளன. கோவை தொழில், பொறியியல், நெசவு ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது. திருப்பூர் நெசவு, ஏற்றுமதிஆகியவற்றில் வலுவாக உள்ளது. ஓசூர் உற்பத்தித் தொழிலில், ஊர்தித்துறையில் முந்தியுள்ளது. திருச்சி பொறியியல், கல்வி மையமாக உள்ளது. மதுரை சேவை, மருத்துவம், சிறுதொழில் மையமாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகம், தொழில்துறை ஆகியவற்றில் முதன்மையானது. சேலம் தொழில்துறையில் வலுவாக உள்ளது. ஈரோடு வேளாண்சார்ந்த வணிகம், நெசவில் வளர்ந்துள்ளது. இவற்றை வலுப்படுத்தினால் ஒரே மெகா சென்னை அல்லாமல் பல வலுவான பகுதிகளில் பரவலாக தமிழ்நாட்டின் பொருண்மியம் வளரும். இது பல்மைய மேம்பாடு (polycentric development) எனப்படும் வளர்ச்சி அணுகுமுறையாகும்.

 

ஒரு விவசாயியின் நிலம் கையகப்படுத்தப்படும்போது அவர் இழப்பது நிலம் மட்டுமல்ல. வாழ்வாதாரம், உணவு உற்பத்தி, சமூக உறவு, தலைமுறைச் சொத்து ஆகியவற்றையும் இழக்கிறார். அதற்குப் பதிலாக கிடைக்கும் இழப்பீடு, அந்த நிலத்தின் எதிர்கால பொருளாதார மதிப்பு உயர்வை ஈடுசெய்யுமா என்பது தனியான கேள்வி. மறுபுறம், விமானநிலையப் பொருளியல் உருவாக்கும் நிலமதிப்புயர்வு, வணிக விலையுயர்வு, தொழில் விலையுயர்வு, சரக்குக் கையாளுகை விலையுயர்வு ஆகியவற்றின் பெருந்தொகை யாரிடம் சேரும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

 

இப்படியான வளர்ச்சியின் இழப்பை யார் சுமக்கிறார்கள் என்பதும் அடிப்படைமானது. ஒரு உழவர் நிலத்தை இழக்கிறார்; ஆனால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பு பின்னர் பல மடங்கு உயரலாம். அந்த உயர்வின் பயனை நிலத்தை இழந்தவரே பெறுகிறாரா? அல்லது புதிய முதலீட்டாளர்களான நிலவிற்பனையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் பெறுகின்றனவா? இந்தக் கேள்விக்கு விடை இல்லாமல் “வளர்ச்சி” என்று கூறுவது முழுமையான பொருளியல் மதிப்பீடு அல்ல.

 

விமான நிலையம் இல்லையென்றால் தமிழகம் பின்னோக்கிச் செல்லும் என்ற வாதமும் முறையல்ல, சென்னையின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் கூடுதல் திறன் தேவைப்படலாம். ஆனால் “கூடுதல் தேவை” என்பது “பரந்தூரில்தான் கட்ட வேண்டும்” என்பதல்ல. தமிழகத்தின் பொருண்மிய முன்னேற்றம் ஒரு விமான நிலையம் அல்லது ஒரு நகரம் மட்டும் சார்ந்ததல்ல. அதன் உண்மையான பலம் மனிதவளம், பரவலான தொழில்முனைவுகள், துறைமுகங்கள், வேளாண்மை, கல்வி, ஊரக வாழ்வியல் உள்ளூர் பொருண்மியம் ஆகியவற்றின் கூட்டுத்திறனில் உள்ளது.

 

எனவே ஒரு நிலத்தை விமானநிலைய மையப் பொருண்மியமாக மாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மை, உணவியல் வளர்ச்சி போன்ற உயிர்மப் பொருண்மியமாகவும் மாற்ற முடியும். முதல் மாதிரி அதிகமான முதலீட்டு இயக்கத்தை உருவாக்கலாம். இரண்டாவது மாதிரி அதிகமான உள்ளூர் வாழ்வாதாரத்தை உருவாக்கக்கூடும். இவை இரண்டும் வெவ்வேறு வளர்ச்சி மாதிரிகள்.

 

இதில் திணையியல் ஓர் ஆழமான மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது. திணையியல் ஒரு நிலத்தை வெறும் விற்பனை மதிப்பு கொண்ட பொருளாகப் பார்ப்பதில்லை. இந்த நிலம் எதைத் தாங்குகிறது? எத்தனை உயிர்களைத் தாங்குகிறது? எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறது? எவ்வளவு நீரைச் சேமிக்கிறது? எவ்வளவு உணவை உருவாக்குகிறது? எத்தனை தலைமுறைகளின் அறிவைத் தாங்குகிறது? என்பதையே கேட்கிறது.

 

இது உறவாண்மை என்ற பார்வை. மனிதன் நிலத்திலிருந்து பிரிந்தவன் அல்ல. நிலம், நீர், உயிர்கள், தொழில், பண்பாடு, மனிதன் ஆகியவை ஒரே உறவமைப்பின் பகுதிகள்.

 

எனவே பரந்தூர் திட்டத்தை மதிப்பிடும்போது குறைந்தது ஏழு கேள்விகளுக்கு வெளிப்படையான விடை தேவை. இன்னும் எவ்வளவு விமான கொள்திறம் (capacity) உண்மையில் தேவை? தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்திவிட்டோமா? நீரியல் தாக்கம் முழு நீர்த்தாங்கல் அளவில் என்ன? உயிரியப் பன்மயம், திணையமைவுச் சேவைகள் (ecosystem services) இழப்பு என்ன?

(திணையமைவுச் சேவை என்பது இயற்கை, பணம் பெறாமல் நமக்கு எவ்வளவு உதவி செய்கிறது என்ற மதிப்பீடு - எடுத்துக்காட்டாக தேனீக்கள் காசு வாங்காமல் பல லிட்டர் தேனைத் தருகின்றன)

நிலத்தின் எதிர்கால பொருளாதார மதிப்பு யாரிடம் செல்கிறது? அதே முதலீட்டை மாற்றுத் துறைகளில் செய்தால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பயன் என்ன?

 

இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான தரவுகளுடன் பதில் அளிக்காமல் “பரந்தூர் இல்லையென்றால் தமிழகம் பின்னோக்கிச் செல்லும்” என்று கூறுவது கொள்கை அளவில் பொருத்தமுடைய கருத்தல்ல.

ஒரு பக்கம், அதிக விமானங்கள் – அதிக முதலீடு – அதிக நகரமயமாக்கல் – அதிக நில மதிப்பு என்ற வளர்ச்சி மாதிரி.

மறுபக்கம், நீர் - உணவு - நிலம் - பல்லுயிர் - உள்ளூர் வேலை - சிறுதொழில் - தற்சார்பு - பலமைய மேம்பாடு என்ற வளர்ச்சி மாதிரி.

முதல் மாதிரி பொருண்மிய வேகத்தை அதிகரிக்கலாம். ஆனால் இரண்டாவது மாதிரி வாழ்வின் அடித்தளத்தைப் பாதுகாக்கிறது.

 

எனவே கேள்வி “பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு மொத்த உள்நாட்டு விளைவிப்பு (GDP) உருவாக்கும்?” என்று மட்டும் பார்ப்பது சிலருக்கான பார்வை.  ''தமிழ்நாடு எவ்வளவு நீர், நிலம், உணவு, உயிரியப் பன்மயம் உள்ளூர் வாழ்வாதாரம் ஆகியவற்றை இழக்கிறது என்பது பலருக்கும் பல்லுயிர்களுக்குமான பார்வை. இது எது சரி என்று மக்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.

ஆக வளர்ச்சியின்  அளவுகோல்தான் என்ன?

“நாம் எவ்வளவு கட்டினோம்?” என்பதல்ல;

“நாம் கட்டிய வளர்ச்சிக்குப் பிறகும் எவ்வளவு உயிரோடு இருக்கிறது?” என்பதே.

வளர்ச்சி என்பது இயற்கையை வென்று பெறப்படும் செல்வம் அல்ல; இயற்கையுடன் உறவைப் பேணி உருவாக்கப்படும் நீடித்த வாழ்வாதாரமாக இருக்க வேண்டும்.

இந்த இயற்கையின் குரலை எழுப்புவர்களின் குரல்வளைகள் இன்று நெரிக்கப்படலாம். அவ்வளவு ஆயுதங்களும் அதிகாரங்களும் அவர்கள் கைகளில் உள்ளன. ஆனால் இயற்கையின் குரலை மட்டும் எந்நாளும் நெரிக்க முடியாது.

இயற்கையின் மக்கள் இன்று தோற்கடிக்கப்படலாம். மடிந்து போகலாம், மாய்ந்தும் போகலாம், இன்று வென்றுவிட்டோம் என்று அவர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடலாம்.

ஆனால் அந்தக் குரல் கானகத்தில், வயல் வெளியில், கடற்கரையில் எப்போதும் ஏதோ ஒரு வழியில், ஏதோ ஒரு மொழியில், கண்ணீராக செந்நீராக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இயற்கை ஒருநாள் திரும்பிப் பார்க்கும்.

Comments


PAMAYAN.ORG

© Pamayan. All Rights Reserved

bottom of page