top of page

திணையியலும் திரையிசையும்

3 hours ago
14 min read

 

திரையிசை என்பது வெறும் பொழுதுபோக்கு இசை அல்ல; அது ஒரு சமூகத்தின் உணர்வு, நிலப்பரப்பு, வாழ்க்கைமுறை, பண்பாட்டு நினைவு ஆகியவற்றின் கலைமயமான வெளிப்பாடாகும். இந்த அடிப்படையில் தமிழ்த் திரையிசையைப் புரிந்துகொள்வதற்கு, தமிழர் சிந்தனை மரபின் ஆழமான அடித்தளமாக விளங்கும் “திணையியல்” பற்றிய புரிதல் அவசியமாகிறது. எனவே இக்கட்டுரை முதலில் திணையியலின் மெய்யியல் மற்றும் மெய்யியல் அடித்தளத்தை ஆராய்கிறது.

 

திணை : ஒரு இலக்கியப் பிரிவு மட்டுமா?

“திணை” என்ற சொல் தமிழ்ச் சமூகத்திற்கு புதியதல்ல. தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை “ஐந்திணை” என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பொதுவாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலவியல்-உணர்வியல் அமைப்புகளே திணை எனக் கருதப்படுகின்றன. ஆனால் திணையை வெறும் “ஐந்திணை” என்ற கட்டுப்பட்ட வரையறைக்குள் அடைத்துவிட முடியாது.

தொல்காப்பியர் அகத்திணை ஏழும், புறத்திணை ஏழும் வகுத்துக் கூறுகிறார். பின்னர் வந்த புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கியங்களில் திணைப் பிரிவுகள் மேலும் விரிவடைகின்றன. இதனால் திணை என்பது ஒரு முடிவுற்ற அமைப்பு அல்ல; காலத்தோடு விரிவடையும் அறிவியல், பண்பாட்டு வடிவமைப்பு என்பதை உணர முடிகிறது.

இன்றைய சமூக மாற்றங்களைப் பார்க்கும்போது, “நகரத்திணை”, “இணையத்திணை” அல்லது “மெய்நிகர் திணை” போன்ற புதிய திணைகளையும் சிந்திக்க முடிகிறது. அதாவது மனிதன் வாழும் சூழல் மாறும் பொழுது, அதனுடன் தொடர்புடைய உணர்வுகள், உறவுகள், மொழிகள், கலை வடிவங்கள் ஆகியவை புதிதாக உருவாகின்றன. எனவே திணை என்பது நிலையான பட்டியல் அல்ல; அது வாழ்வியல் மாற்றங்களோடு விரிவடையும் திறந்த அறிவியல் அமைப்பாகும்.

 

திணையின் சொற்பிறப்பும் சாரமும்

“திணை” என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் “இணைந்திருத்தல்”, “செறிந்திருத்தல்”, “ஒன்றோடொன்று உறவு கொண்டிருத்தல்” என்பதாகும். மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் “திண்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து “திண்”, “திண்ணை”, “திணை” போன்ற சொற்கள் உருவானதாகக் குறிப்பிடுகிறார். “திண்ணியது” என்பது உறுதியானது, செறிந்தது, ஒருங்கிணைந்தது என்பதைக் குறிக்கிறது.

இந்த அடிப்படையில் திணை என்பது வெறும் நிலப்பரப்பின் பெயர் அல்ல; அது இயற்கை, மனிதன், உணர்வு, தொழில், உணவு, காலநிலை, பண்பாடு, கலை, சமூக உறவு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் முழுமையான வாழ்வியல் அமைப்பாகும்.

அதனால் திணையியல் என்பது “சூழலியல் சார்ந்த மனித வாழ்வியலின் அறிவியல்” எனக் கூறலாம்.

 

தமிழர்களுக்கு மெய்யியல் இல்லையா?:

தமிழர் சிந்தனை மரபைப் பற்றிப் பேசும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: தமிழர்களுக்கென தனித்த மெய்யியல் இருந்ததா?

பொதுவாக இந்திய மெய்யியல் பற்றிய ஆய்வுகளில், மெய்யியல் சிந்தனை என்பது வேத மரபிலிருந்து உருவானது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஹெகல் போன்ற மேலைத்தேய அறிஞர்கள் இந்திய, சீன மக்களின் சிந்தனை மரபுகளை பெரும்பாலும் சமய அடிப்படையிலானதாகவே பார்த்தனர். அவர்களது பார்வையில், இம்மக்களிடம் “சுதந்திரமான பகுத்தறிவு மெய்யியல்” உருவாகவில்லை என்று கூறி வந்தனர்.

இந்தியத் மெய்யியல் வரலாற்றை எழுதிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற அறிஞர்களும் இந்திய மெய்யியலின் மையமாக வைதீக மரபையே முன்னிறுத்துகின்றனர். இதன் விளைவாக, தமிழர் சிந்தனை என்பது வேத, சைன, பௌத்த அல்லது பிற வெளிப்புற மரபுகளின் தாக்கத்தால் உருவானது என்ற பார்வை நிலவுகிறது.

ஆனால் இவ்வகையான பார்வை பல அடிப்படை ஐயங்களை எழுப்புகிறது.

 ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்குகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழ் இலக்கியங்கள், சங்கப் பாடல்கள், தொல்காப்பியம் போன்ற அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் தமிழரின் ஆழமான அறிவியல், பண்பாட்டு வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.

இவ்வளவு செறிந்த இலக்கிய, மொழி, சமூக, கலை மரபைக் கொண்ட மக்களிடம் தனித்துவமான மெய்யியல் சிந்தனை இல்லாமல் இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சிகளில் பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழர் மெய்யியல் தேடல்:

பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்ற சில அறிஞர்கள் “ஆசீவகம்” தமிழரின் அடிப்படை மெய்யியலாக இருக்கலாம் என்று முன்வைத்தனர். ஆனால் அதற்கும் எதிர்வினைகள் எழுந்தன. ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலி கோசர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அது தமிழரின் சொந்த சிந்தனை அல்ல என்று சிலர் வாதிட்டனர்.

அதேபோல சைவ சித்தாந்தம் தமிழரின் உயர்ந்த மெய்யியல் மரபாகக் கருதப்பட்டாலும், அது வேதங்களை ஏற்றுக்கொண்ட அமைப்பாக இருப்பதால், முழுமையான “தமிழர் மெய்யியல்” என அதைச் சுட்டிக்காட்ட முடியாது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறு ஒவ்வொரு சிந்தனை மரபும் வெளிப்புற தாக்கங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டபோது, தமிழரின் அடிப்படைச் சிந்தனை அமைப்பாக எது இருக்க முடியும் என்ற தேடல் தொடர்ந்து நிலவியது. இந்தத் தேடலின் இறுதியில் நமக்குக் கிடைப்பது “திணை” என்ற கருத்தாகும்.

 

திணை : தமிழரின் அடிப்படை மெய்யியல்:

திணை என்பது வெறும் இலக்கியப் பிரிவு அல்ல; அது ஒரு முழுமையான உலகப்பார்வை. மனிதன் இயற்கையிலிருந்து தனியாக இல்லை; இயற்கையோடு இணைந்த உயிர் என்பதையே திணையியல் வலியுறுத்துகிறது. நிலம் மாறினால் வாழ்க்கை மாறும்; வாழ்க்கை மாறினால் உணர்வு மாறும்; உணர்வு மாறினால் கலை, இசை, மொழி, உறவு ஆகியவை மாறும் என்ற சூழலியல் சார்ந்த மெய்யியல் அடித்தளமே திணையியலின் மையமாகும்.

இந்த அடிப்படையில் திணையியல் என்பது:

·         இயற்கை மையச் சிந்தனை,

·         உறவு மெய்யியல்,

·         வாழ்வியல் அறவியல்,

·         சூழலியல் அறிவியல்,

·         உணர்வுகளின் அழகியல்

என பல அடுக்குகளைக் கொண்டதாக விளங்குகிறது.

திணை என்பது வெறும் இலக்கியப் பகுப்புமுறை அல்ல; அது தமிழர் வாழ்வியலை, உலகுணர்வை, மனித–இயற்கை உறவை, அறிவு தோற்றத்தை, அறவியலை, அழகியலை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான மெய்யியல் அமைப்பு ஆகும். ஆனால் திணையைப் பற்றி நவீன காலத்தில் நடைபெற்ற ஆய்வுகள் பெரும்பாலும் அதை சங்க இலக்கியத்தின் காதல்/வீரம் என்ற வகைப்பாடாக மட்டுமே குறுகிய கோணத்தில் அணுகியுள்ளன. இதன் விளைவாக திணையின் ஆழமான மெய்யியல் அடித்தளங்கள் மறைக்கப்பட்டுவிட்டன.

ஒரு சிந்தனை மரபு “மெய்யியல்” (Philosophy) எனக் கருதப்பட வேண்டுமெனில் அதற்குச் சில அடிப்படை கூறுகள் இருக்க வேண்டும். அவை:

1.    இருப்பியல் (Ontology) – உலகம் எவ்வாறு இருக்கிறது?

2.    அறிதலியல் (Epistemology) – அறிவு எவ்வாறு தோன்றுகிறது?

3.    அறவியல் (Ethics) – மனித நடத்தை எதன் அடிப்படையில் அமைவது?

4.    அழகியல் (Aesthetics) – அழகு, உணர்வு, கலை ஆகியவை எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன?

இந்த நான்கு கூறுகளும் திணை மரபில் ஆழமாக உள்ளன. குறிப்பாக தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அல்ல; அது தமிழின் அறிவியல் –மெய்யியல் நூலாகப் பார்க்கப்பட வேண்டும்.

 

“உறவாண்மை” என்ற திணை இருப்பியல் (Ontology):

ஒவ்வொரு மெய்யியல் மரபுக்கும் ஒரு அடிப்படை இருப்பியல் (Ontology) உண்டு. மேற்கத்திய மெய்யியல் மரபு கிரேக்க சிந்தனையிலிருந்து வளர்ந்தது. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மேற்கத்திய உலகுணர்வின் அடித்தளங்களை அமைத்தனர். ஆனால் சாக்ரடீஸின் சிந்தனைகள் அவருடைய சொந்த எழுத்துக்களாக நமக்கு கிடைப்பதில்லை; பின்னாளில் அவரது மாணவர்கள் பதிவு செய்த உரைகளின் வாயிலாகவே நாம் அறிகிறோம். இதற்கு மாறாக, தொல்காப்பியர் தமது சிந்தனைகளை நேரடியாக எழுத்து வடிவில் அமைத்துள்ளார். இது தமிழ்ச் சிந்தனை மரபின் பெரும் வலிமையாகும்.

பொதுவாக மெய்யியலில் உலகைப் புரிந்துகொள்ள இரண்டு முக்கிய அணுகுமுறைகள் காணப்படுகின்றன:

·       கருத்து முதல்வாதம் (Idealism) – கருத்தே முந்தையது; பொருள் பிந்தையது.

·       பொருள் முதல்வாதம் (Materialism) – பொருளே முந்தையது; கருத்து பிந்தையது.

மார்க்சிய சிந்தனை பொருள் முதல்வாதத்தை வலியுறுத்தியது. உலகம் பொருளால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற பார்வை அதற்குள் உள்ளது. ஆனால் நவீன அறிவியல், குறிப்பாக ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடும், குவாண்டம் இயற்பியலும் வந்த பின்னர், “பொருள்” என்பது தனித்து நிற்கும் நிலையான ஒன்றல்ல என்பதை வெளிப்படுத்தின. பொருள் என்பது உறவுகளின் வலையமைப்பில் மட்டுமே பொருளாகிறது. அது ஆற்றல், அலை, தொடர்பு ஆகியவற்றின் நிகழ்வாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

இச்சூழலில், ‘திணை'யின் இருப்பியல்பு என்பது கருத்துமுதன்மைக்கோஇ  அல்லது பொருள் முதன்மைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை; மாறாக, அது பின்வருமாறு முன்வைக்கிறது:

“இருப்பியல்பு அல்லது மெய்மை (reality) என்பது உறவுகளில் இருக்கிறது”

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் வெறும் நிலப்பகுதிகள் அல்ல. அவை:

·         நிலம்,

·         காலம்,

·         உயிரினங்கள்,

·         தொழில்,

·         உணர்ச்சி,

·         சமூக உறவு,

·         வாழ்க்கை முறை

இவற்றுடனான ஒத்தியைந்த உறவுகளால் உருவான வாழ்வியல் அமைப்புகள்.

அதாவது, ஒரு பொருள் தனிமையில் இல்லை; அது உறவுகளின் தொகுப்பாகவே உள்ளது. இந்த “உறவாண்மை” (Relationality) தான் திணையின் அடிப்படை இருப்பியல் (Ontology).

 

திணை  அறிதலியல் (Epistemology): அறிவு எவ்வாறு தோன்றுகிறது?

திணையில் அறிவு என்பது வெறும் தர்க்க (logic) விளைவு அல்ல; அது அனுபவம், சூழல், உறவு, உணர்வு, செயல்பாடு ஆகியவற்றின் இணைப்பாக தோன்றுகிறது.

தொல்காப்பியத்தில் அறிவு தோற்றத்தைப் பற்றிய பல நுட்பமான கூறுகள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் முறையாக அறிதலியல் கோணத்தில் ஆய்வு செய்யவில்லை.

 

மேற்கத்திய இயங்கியல் (Dialectics):

மேற்கத்திய உலகில் புகழ்பெற்ற அறிதல் முறைகளில் சிறப்பானது இயங்கியல் (Dialectics) ஆகும். ஹெகல், மார்க்ஸ் வழியாக இது பரவியது. இதில்:

·         Thesis – ஒரு கருத்து

·         Antithesis – எதிர்கருத்து

·         Synthesis – தொகுப்புக் கருத்து

என்ற முரண்பாட்டு இயக்கத்தின் வழியாக அறிவு உருவாகிறது என்று கருதப்படுகிறது.

தமிழில் இதை “இயங்கியல்” என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் இது “முரண்பாட்டியல்” என்று அழைக்கப்படலாம்; ஏனெனில் அறிவு முரண்பாட்டின் வழியே நகர்கிறது என்ற அடிப்படை கருத்து இதில் உள்ளது.

 

நியாய சூத்திர அறிதல் முறை:

வடஇந்திய மரபில் “நியாய சூத்திரம்” முக்கியமான அறிதல் கோட்பாடாகும். அதில் அறிவு தோன்றும் வழிகள்:

1.    பிரத்யட்சம் – நேரடிப் புலனுணர்வு

2.    அனுமானம் – ஊகத் தீர்வு

3.    உவமானம் – ஒப்புமை

4.    சப்தம் – சான்று / அதிகாரப்பூர்வ வாக்கு

என வரிசைப்படுத்தப்படுகின்றன.

 

திணையின் அறிதல் முறை:

திணை மரபில் அறிவு என்பது வெறும் தர்க்க அல்லது புலனுணர்வு செயல்முறை அல்ல. காட்சி, அனுபவம், உணர்ச்சி, சூழல், வாழ்வியல் தொடர்பு, ஈடுபடுதல் இவற்றின் ஒருங்கிணைப்பாக உருவாகிறது.

தமிழ்ச் சிந்தனையில் காணப்படும்:

“காட்சி – ஐயம் – துணிவு - உட்கோள் - குறிப்பறிவு”

என்ற ஐந்தடுக்குப்  படிநிலையாக ஒரு தனித்துவமான அறிதலியல் முறையாக அமைந்துள்ளது.

காட்சி (perception)

உலகை நேரடியாக எதிர்கொள்வது.

ஐயம் (Inference)

கேள்வி எழுப்புதல்; சந்தேகித்தல்; ஆராய்தல்.

துணிவு (Decison)

சூழலோடு பொருந்தும் தீர்மானம், புரிதல்.

உட்கோள் (Internalization)

நம்பிக்கை/மதிப்பீடுகள்/நடத்தைகளை உள்வாங்கி சொந்த அடையாளத் துடன் ஒருங்கிணைத்தல்.

குறிப்பறிவு (Determination)

இறுதியாக தெளிவான முடிவெடுத்துச் செயல்படுதல்

இப்படியாக அறிவுத் தோற்றம் பெறும் படிநிலைகள் அமைந்துள்ளன என்று திணையியல் விளக்குகிறது.

 

திணையின் அறவியல்

திணை அறவியல் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி. ஆகவே அறம் என்பது மனித ஒழுக்கம் மட்டுமல்ல; உயிர்களிடையேயான சமநிலை.

திணை அறவியலின் முக்கிய கூறுகள்:

  • எல்லா உயிர்களிடமும் அன்பு,

  • பன்மயத்தையை மதித்தல்,

  • அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலும், பேணுதலும்,

  • தற்சார்பு

  • அளவோடு நுகர்தல்

  • இயற்கையுடன் இணைந்திருத்தல்,

இது மனித முதன்மை (Anthropocentric) அறவியல் அல்ல; இயற்கை முதன்மை (Eco-centric) அறவியல்.

 

திணையின் அழகியல்

திணையில் அழகு என்பது வெறும் கலைநயம் அல்ல; அது வாழ்க்கை–இயற்கை–உணர்ச்சி இவற்றின் ஒத்தியைவு ஆகும்..

குறிஞ்சி திணையில் காதல் இரவாகும்; நெய்தலில் இரங்கல் எற்பாடு ஆகும்; முல்லையில் காத்திருப்பு மாலையாகும். அதாவது இயற்கை ஒரு பின்னணி அல்ல; உணர்வின் உயிரோட்டம்.

இதனால் திணை அழகியல்:

·         சூழல் சார்ந்தது,

·         உணர்ச்சி சார்ந்தது,

·         வாழ்வியல் சார்ந்தது,

·         உறவியல் சார்ந்தது.

மேற்கத்திய அழகியல் பெரும்பாலும் “பார்ப்பவரின் அனுபவம்” மீது கவனம் செலுத்தினாலும், திணை அழகியல் “உறவின் அனுபவம்” மீது அமைகிறது.

திணை அழகியல் எங்கிருந்து தொடங்குகிறது என்று பார்த்தால் அது மிக நுட்பமாக மண்ணிலிருந்து தொடங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்திணைகள் வெறும் நிலப்பகுதி வகைப்பாடுகள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான உயிரியல், காலநிலை, தொழில், உணர்ச்சி, சமூக உறவு, இசை, உணவு, வழிபாடு, கலை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சூழலியல் அமைப்புகள் ஆகும். இதனால் திணை அழகியல் என்பது “மண்ணிலிருந்து தோன்றும் அழகியல்” என்று கூறலாம். உலகில் பல கலை மரபுகள் மனித உணர்விலிருந்து கலையை விளக்குகின்றன; ஆனால் தமிழ்த் திணை மரபு நிலம், காலம், உயிர், உணர்வு ஆகியவற்றின் உறவிலிருந்து கலையை விளக்குகிறது.

இதனை வடஇந்திய ரசக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பரதமுனிவரின் நாட்டியசாத்திரத்தில் காணப்படும் ‘ரசக் கோட்பாடு’ இந்திய அழகியல் மரபில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த மரபில் கலை அனுபவம் என்பது மனிதனை பரவச நிலைக்குக் கொண்டு செல்வதாகக் கருதப்படுகிறது. ஒரு இசையையோ நாடகத்தையோ ரசிக்கும் போது மனிதன் தன்னை மறந்து வேறொரு உணர்வுலகிற்குள் செல்கிறான் என்பது அந்தக் கோட்பாட்டின் மையம். இந்த அணுகுமுறை பெரும்பாலும் ஒரு அப்ஸ்ட்ராக்ட் அல்லது கருத்தியல் அடிப்படையிலான அழகியல். ஆனால் திணை அழகியல் அப்படியல்ல. திணை இசை மனிதனை உலகத்திலிருந்து பிரிக்கவில்லை; மாறாக உலகோடு மேலும் நெருக்கமாக இணைக்கிறது. அது மண்ணோடு, காற்றோடு, மழையோடு, உயிர்களோடு, வாழ்வோடு இணைந்த அனுபவமாக இருக்கிறது. இதுவே திணை அழகியலுக்கும் ரசக் கோட்பாட்டிற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு.

தொல்காப்பியத்தில் திணையின் கட்டமைப்பு “முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள்” என்ற மூன்று அடிப்படைகளில் விளக்கப்படுகிறது. இதில் முதல் பொருள் என்பது நிலமும் பொழுதும் (“Time and Space”) ஆகும். அதாவது திணையின் அடிப்படை கட்டமைப்பு கால–இட உறவின் மீது அமைந்துள்ளது. இந்த நிலம், பொழுது என்பது வெறும் புவியியல் விவரிப்புகள் அல்ல; மனித அனுபவத்தின் அடித்தளங்கள். இதற்குப் பிறகுதான் கருப்பொருள் வருகிறது. கருப்பொருளில் தெய்வம், உணவு, மரம், பறவை, இசை, தொழில் போன்ற கூறுகள் வருகின்றன. இங்கு மிக முக்கியமான ஒன்று என்னவெனில் தொல்காப்பியர் தெய்வத்தை முதல் பொருளில் வைக்கவில்லை; கருப்பொருளில் வைக்கிறார். இது தமிழ்ச் சிந்தனையின் சூழலியல் ஆழத்தை காட்டுகிறது. தெய்வம் என்பது இங்கு வெறும் சமயக் கடவுள் அல்ல; உயிர்களை இயக்கும் ஆற்றலின் அடையாளமாகப் புரிந்துகொள்ளப்பட முடியும். கதிரவனிலிருந்து வரும் ஆற்றல் உயிர்களின் அடிப்படை மூலமாக இருப்பதைப் போல, தெய்வம் என்பது இயற்கை ஆற்றலின் உருவகமாகத் திகழ்கிறது.


தொல்காப்பியத்தில் இடம்பெறும் “தெய்வம் உணாவே மாமறை புள் செய்தி யாழின் பகுதியொடு” என்ற வரிகளில் “யாழின் பகுதி” என்ற சொல் மிக முக்கியமானது. இங்கு இசை தனித்து நிற்கும் கலை வடிவமாக இல்லை; திணை வாழ்வியலின் ஒரு கூறாக உள்ளது. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் இசைக்கான பல சொற்கள் காணப்படுகின்றன: யாழ், பண், திறம், இசை போன்றவை. இவை அனைத்தும் இசையை ஒரு உறவியல் அனுபவமாகப் புரிந்துகொள்கின்றன. “இசை” என்ற சொல்லே “இசைவித்தல்” என்ற வேர்ச்சொல்லுடன் தொடர்புடையது. அதாவது மனிதன், இயற்கை, உணர்வு, காலம், உயிர் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று ஒத்திசைவாக்கும் செயலே இசை.


இசை எவ்வாறு தோன்றியது என்பது குறித்து உலகளவில் பல கருத்துக்கள் உள்ளன. சிலர் தாய் குழந்தைக்கு தாலாட்டு பாடியதில் இருந்து இசை தோன்றியது என்கிறார்கள். சிலர் வேட்டையாடும் போது எழுந்த ஒலிகளிலிருந்து இசை தோன்றியது என்கிறார்கள். ஆனால் தமிழ்ச் சிந்தனை இசையின் தோற்றத்தை இயற்கையின் ஒலிகளோடு இணைத்து விளக்குகிறது. இதற்கான மிக அழகான உதாரணம் அகநானூற்றில் கபிலர் பாடிய பாடல் ஆகும்.

‘ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்

கோடை அவ் வளி குழலிசை ஆக,

பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக,

கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,

மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,

இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,

மந்தி நல் அவை மருள்வன நோக்க,

கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்

நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் (அகநானூறு: 82)

என்ற வரிகளில் கபிலர் ஒரு அதிசயமான இயற்கை வடிவத்தை முன்வைக்கிறார். மூங்கிலில் வண்டு துளையிடுகிறது. அந்தத் துளை வழியாக காற்று செல்கிறது. காற்று செல்லும் போது ஒரு ஒலி உருவாகிறது. அந்த ஒலியே “குழலிசை” ஆகிறது. இதுவே புல்லாங்குழலின் இயற்கை தோற்றம் எனக் காட்டப்படுகிறது. அதேபோல் அருவி விழும் ஒலி முழவின் ஓசையாகக் கூறப்படுகிறது. மான்களின் கூட்ட ஒலி தூம்பு என்ற இசைக்கருவியின் ஒலியுடன் ஒப்பிடப்படுகிறது. வண்டுகளின் ரீங்கார ஒலி யாழின் நரம்பிசையோடு ஒப்பிடப்படுகிறது. இங்கு மிக முக்கியமான உண்மை என்னவெனில் இசைக்கருவிகள் மனிதனால் வெறுமனே உருவாக்கப்பட்டவை அல்ல; இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ளப்பட்டவை.

இந்தக் காட்சிகளில் இயற்கை ஒரு பின்னணி அல்ல; அது இசையின் மூலாதாரம். மலை, காற்று, அருவி, வண்டு, மான், மயில் ஆகியவை அனைத்தும் இசையின் பங்காளிகளாகின்றன. மேலும் கபிலர் அந்தக் காட்சியை ஒரு அரங்க அனுபவமாக மாற்றுகிறார். மான்களும் குரங்குகளும் அவையோராக இருக்கின்றன; மயில் ஆடுகிறது; இயற்கையே ஒரு இசை அரங்கமாக மாறுகிறது. இங்கு மனிதன் இயற்கையின் மேலாதிக்கம் செலுத்துபவன் அல்ல; இயற்கையோடு இணைந்து அனுபவிப்பவன்.

இதுவே திணை அழகியலின் மையம். திணை அழகியல் என்பது மனித மைய அழகியல் அல்ல; அது சூழலியல் அழகியல். மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்தவன் அல்ல; அதன் ஓர் அங்கம். அதனால் திணை இசை என்பது வெறும் கலை அனுபவம் அல்ல; அது உறவின் அனுபவம். அது மண்ணிலிருந்து தொடங்குகிறது. நிலத்திலிருந்து, காலத்திலிருந்து, காற்றிலிருந்து, உயிர்களிலிருந்து தோன்றுகிறது. இந்த அடிப்படையில்தான் திணை அழகியல் உலகின் பிற அழகியல் மரபுகளிலிருந்து தனித்துவமானதாக விளங்குகிறது.

இவ்வகையில் திணை அழகியல் என்பது “இயற்கையோடு மனித உணர்வை இசைவிக்கும் வாழ்வியல் அழகியல்” என்று வரையறுக்கப்படலாம். அது உலகத்திலிருந்து தப்பிச் செல்லும் பரவசத்தை உருவாக்குவதில்லை; மாறாக மனிதனை உலகோடு மீண்டும் இணைக்கிறது. இந்த இணைவு, இந்த இசைவு, இந்த உறவுணர்வே தமிழ்ச் சிந்தனையின் மிக ஆழமான அழகியல் பங்களிப்பாகும்.

திணை மரபில் இசை என்பது வெறும் கலை வடிவமல்ல; அது மனிதன், இயற்கை, உணர்வு, சமூக வாழ்வு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு வாழ்வியல் அமைப்பாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உலகின் பல சிந்தனை மரபுகளில் இசையின் தோற்றம் பெரும்பாலும் தெய்வீகமான ஒன்றாக விளக்கப்படுகிறது. இறைவன் மனிதனுக்கு இசையை அருளினான், அல்லது வானுலகிலிருந்து இசை வந்தது என்ற கருத்துகள் பல மரபுகளில் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்த் திணை மரபின் தனிச்சிறப்பு என்னவெனில், அது இசையை வானுலகிலிருந்து இறங்கிய ஒன்றாக அல்லாமல், மண்ணிலிருந்து, இயற்கையிலிருந்து, வாழ்வியலிலிருந்து தோன்றிய ஒன்றாகக் காண்கிறது. இந்தப் பார்வை உலக இசையியல் வரலாற்றில் தனித்துவமானது.

திணை மரபில் இசை என்பது சூழலியல் அனுபவமாகும். காற்றின் ஒலி, அருவியின் முழக்கம், வண்டின் ரீங்காரம், மான்களின் கூக்குரல், மனித உழைப்பு, காலநிலை, நிலப்பரப்பு ஆகியவை இசையின் மூலங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் இசை என்பது மனிதனால் தனித்து உருவாக்கப்பட்ட செயற்கை அமைப்பு அல்ல; மாறாக இயற்கையோடு மனிதன் கொண்ட உறவின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை திணை இசையியலை மற்ற இசை மரபுகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

தொல்காப்பியத்தில் இசை மற்றும் பறை ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு மிகவும் நுட்பமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவை இரண்டும் ஒலி சார்ந்த கருவிகளாக இருந்தாலும் அவற்றின் நோக்கமும் செயல்பாடும் வேறுபட்டவை. குறிப்பாக “பறை” என்பது பெரும்பாலும் தகவல் தொடர்பு கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களை முழுமையாகப் பார்க்கும்போது, பறையின் பயன்பாடுகளில் பெரும்பாலானவை தகவல் பரிமாற்றத்தோடு தொடர்புடையவை என்பதை காணலாம்.

குறிஞ்சி திணையில் பயன்படுத்தப்பட்ட “தொண்டகப்பறை” இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மலைப்பகுதிகளில் தினைப்பயிர்களைப் பாதுகாக்கும் பெண்கள் கிளிகளையும் பிற பறவைகளையும் விரட்டுவதற்காக இந்தப் பறையை பயன்படுத்தினர். அதேபோல் வேலன் வெறியாட்டு போன்ற சடங்குகளிலும் தொண்டகப்பறை பயன்படுத்தப்பட்டது. இங்கு பறை என்பது ஒரு தகவல் பரிமாற்ற மற்றும் கூட்டுச்செயல்பாட்டு கருவியாக செயல்படுகிறது.

முல்லை நிலத்தில் “ஏறுகோட் பறை” பயன்படுத்தப்பட்டது. “ஏறு” என்பது காளையை குறிக்கும். இன்றைய ஜல்லிக்கட்டின் பழமையான வடிவமாகக் கருதப்படும் ஏறு தழுவுதல் நிகழ்வுகளில் இந்தப் பறை பயன்படுத்தப்பட்டது. அதேபோல் மாடுகளை கூட்டமாக அழைத்து வருவதற்கும், மேய்ச்சல் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் இது பயன்பட்டது. இங்கு பறை ஒரு சமூக தகவல் தொடர்பு கருவியாக செயல்படுகிறது.

மருத நிலத்தில் “நெல்லறி பறை” பயன்படுத்தப்பட்டது. நெல் அறுவடைக்கு செல்லும் போது இந்தப் பறை ஒலிக்கப்பட்டது. இதற்கும் தகவல் தொடர்பு சார்ந்த நோக்கம் இருந்தது. நெல்வயலில் இருந்த பறவைகள் மற்றும் சிறு உயிரினங்கள் அங்கிருந்து விலகிச் செல்லும் வகையில் ஒலி எழுப்பப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் அறுவடையின் போது உயிரினங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இங்கு பறை ஒரு சூழலியல் ஒழுங்கமைப்பின் பகுதியாகவும் செயல்படுகிறது.

நெய்தல் திணையில் “மீன்கோட் பறை” பயன்படுத்தப்பட்டது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்கள் பயணத்தை அறிவிக்கவும், குழுவினரை ஒருங்கிணைக்கவும் இதைப் பயன்படுத்தினர். பாலைத்திணையில் “துடி” என்ற பறை பயன்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு திணைக்கும் தனித்துவமான பறை இருந்தது. இவை அனைத்தும் தகவல் தொடர்பு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் வாழ்வியல் தேவைகளோடு தொடர்புடையவை.

ஆனால் “யாழ்” என்பது பறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இசை உலகத்தைச் சேர்ந்தது. பறை ஒரு தகவல் தொடர்பு கருவி என்றால், யாழ் ஒரு உணர்ச்சி மற்றும் இசைவின் கருவி. யாழ் தொடர்பாக இசை அறிஞர்கள் குறிப்பிடும் ஒரு முக்கியமான கருத்து என்னவெனில், “யாழ்” என்பது முழுமையான ஒரு பண் அமைப்பைக் குறிக்கும். ஏழு சுரங்களைக் கொண்ட ஒரு முழுமையான இசை அமைப்பே யாழ் எனவும், அதிலிருந்து பிறந்த பல சிறுபண்கள் பின்னாளில் உருவாகின எனவும் கூறப்படுகிறது. பின்னாளில் “ராகம்” என அழைக்கப்பட்ட இசை அமைப்புகளின் முன்னோடியாக பண் அமைப்பை பார்க்கலாம்.

இந்த அடிப்படையில் பறை மற்றும் யாழ் ஆகியவற்றின் வேறுபாடு தெளிவாகிறது. பறை ஒரு தகவலை எடுத்துச் செல்கிறது. தகவல் கேட்பவரை சென்றடைந்தவுடன் அதன் செயல் முடிகிறது. ஆனால் இசை அப்படியல்ல. இசை மனிதனை அடுத்த உணர்வுநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அது மகிழ்விக்கிறது, உணர்வுகளை உண்டாக்குகிறது, மனதை இசைவிக்கிறது. இதுவே இசையின் அடிப்படை தன்மை.

தொல்காப்பியத்தின் “மெய்ப்பாட்டியல்” இதனை மேலும் ஆழமாக விளக்குகிறது. தொல்காப்பியர் எண் சுவைகள் அல்லது எட்டு மெய்ப்பாடுகளைப் பற்றி பேசுகிறார்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற உணர்வுகள் மனித அனுபவத்தின் அடிப்படை வடிவங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வுணர்வுகள் பல்வேறு சூழல்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. இதனோடு தொடர்புடைய இசை வடிவங்களும் உருவாகின்றன. அதாவது ஒவ்வொரு உணர்விற்கும் அதற்கேற்ற இசை அமைப்பு இருக்கிறது.

இதைக் மேலும் விரிவாக்கிப் பார்த்தால், ஒவ்வொரு திணைக்கும் தனித்த இசை உள்ளது. குறிஞ்சிக்கு ஒரு பண், முல்லைக்கு ஒரு பண், நெய்தலுக்கு ஒரு பண் என இசை நிலப்பரப்போடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இதுவே முடிவல்ல. ஒவ்வொரு திணைக்குள்ளும் பல சிறு பிரிவுகள் உள்ளன. இவற்றை “நுண் திணைகள்” (micro thinai) எனக் கருதலாம். ஒவ்வொரு சூழல், ஒவ்வொரு பொழுது, ஒவ்வொரு செயல், ஒவ்வொரு உணர்வு ஆகியவற்றிற்கும் தனித்துவமான இசை அமைப்புகள் உருவாகின்றன. இவ்வாறு இசை தொடர்ந்து கிளைகளாகப் பிரிந்து விரிவடைகிறது.

இதனால் திணை இசையியல் என்பது ஒரு சூழலியல் இசை அமைப்பாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இசை என்பது வெறும் ஒலி அல்ல; அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒத்திசைவு. பல ஒலிகள் ஒருமித்த இயைவுடன் அமைக்கப்படும் போது தான் அவை இசையாகின்றன. இந்த “இயைவு” (Harmony) தான் இசையின் உயிர். அதனால் தமிழில் “இசை” என்ற சொல்லே “இசைவித்தல்” என்ற வேரிலிருந்து உருவானது என்பது முக்கியமானது.

இந்த இசை மரபின் தொடர்ச்சியை பின்னாளிலும் காண முடிகிறது. பக்தி இயக்க காலத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்கள் பண் அடிப்படையில் பாடப்பட்டன. பின்னர் தமிழ் இசை மரபில் மூவர்களின் கீர்த்தனைகள் உருவானன. இந்தப் பண் மரபே பின்னாளில் “ராகம்” என்ற வடிவில் மறுவடிவம் பெற்றது. அதனுடைய நீட்சியாகவே நவீன திரையிசையையும் பார்க்க முடியும்.

திரையிசை என்பது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவான புதிய ஊடக இசை வடிவமாக இருந்தாலும், அதன் ஆழமான இசை வேர் தமிழின் பழமையான பண் மரபோடு இணைந்துள்ளது. ஒரு திரைப்பாடல் மனித உணர்வுகளை இசையின் மூலம் வடிவமைப்பது, குறிப்பிட்ட சூழலுக்கேற்ற ராகங்களைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பிட்ட காலநிலை அல்லது உணர்வை இசையின் மூலம் உருவாக்குவது ஆகிய அனைத்தும் திணை இசையியலின் தொலைந்த தொடர்ச்சிகளாகக் கருதப்படலாம்.

இவ்வகையில் திணை இசை என்பது வெறும் இசை மட்டுமல்ல; அது மண், மனிதன், உயிர், உணர்வு, தகவல் தொடர்பு, சமூக வாழ்க்கை மற்றும் சூழலியல் ஆகிய அனைத்தையும் இணைக்கும் தமிழ்ச் சிந்தனையின் மிக ஆழமான கலைமெய்யியல் அமைப்பாகும்.

தமிழ் திரையிசையை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால், அதன் அடிப்படை உணர்வு அமைப்புகளிலும் காட்சித் தேர்வுகளிலும் இசை வடிவங்களிலும் திணையின் தொடர்ச்சிகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

தமிழ் திரையிசை என்பது வெறும் நவீன தொழில்நுட்ப கலை வடிவம் மட்டுமல்ல; அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்த தமிழிசை மரபின் புதிய ஊடக வடிவமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். செவ்வியல் இசை, நாட்டார் இசை, பக்தி இசை, பண் மரபு ஆகிய அனைத்தும் திரையிசையில் பல்வேறு வடிவங்களில் கலந்து இயங்குகின்றன. இதனால் திரையிசையை திணை அடிப்படையில் வாசிப்பது சாத்தியமானதோடு, அது தமிழ்ச் சிந்தனையின் தொடர்ச்சியை விளக்கும் ஒரு முக்கியமான ஆய்வு முறையாகவும் அமைகிறது.

திணையின் அடிப்படை கூறுகளான நிலம், பொழுது, கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாமல், இன்றைய திரைப்பாடல்களிலும் தொடர்ச்சியாக செயல்படுகின்றன. எந்த ஒரு செப்பமான உணர்வைத் தூண்டும் தமிழ்ப் பாடலையும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட திணை அமைப்பு இருப்பதை காண முடியும். பாடலின் காட்சியமைப்பு, காலப்பொழுது, இயற்கைக் கூறுகள், உணர்ச்சி நிலை, இசை ஓட்டம் ஆகியவை அனைத்தும் ஒரு திணை அமைப்போடு தொடர்புடையவையாக அமைகின்றன.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக சங்க இலக்கியத்தில் இடம்பெறும் குறுந்தொகைப் பாடல்களை குறிப்பிடலாம். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் தமிழர் இயற்கை உணர்வின் மிக அழகான வெளிப்பாடாகும். இந்தப் பாடலில் தும்பி அல்லது வண்டு பூவிலிருந்து தேனை எடுக்கும் காட்சி மூலம் காதல் உணர்வு நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. பூ, வண்டு, மகரந்தம், தேன் ஆகிய இயற்கைச் செயல்பாடுகள் மனித உணர்வுகளின் உருவகங்களாக மாறுகின்றன.இந்தக் காட்சி பின்னாளில் தமிழ் திரையிசையிலும் தொடர்கிறது.

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக ('வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படம்)

என்ற திரைப்பாடலில், சங்க இலக்கியத்தில் காணப்படும் வண்டு–மலர் உருவகம் புதிய வடிவில் மீள்பயன்படுத்தப்படுகிறது. இங்கு காதல் உணர்வு இயற்கைக் காட்சிகளின் வழியே வெளிப்படுகிறது. இதன் மூலம் சங்க கால கற்பனை உலகம் முற்றிலும் மறைந்துவிடாமல், நவீன ஊடகங்களுக்குள் புதிய வடிவில் தொடர்கிறது என்பதை காண முடிகிறது.

இதேபோன்று நிலா, மலர், காற்று, இரவு, மழை, மலை, கடல் போன்ற இயற்கைக் கூறுகள் சங்க இலக்கியத்திலிருந்து திரையிசை வரை தொடர்ச்சியாகப் பயன்பட்டு வருகின்றன.

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்

பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச்-செங்கையால்

காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே

வேர்த்தாளைக் காணென்றான் வேந்து. (நளவெண்பா: 184)

என்ற நளவெண்பா பாடலில் பெண்ணின் முகம் மலராகவும் நிலவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இதே காட்சித் தொடர்ச்சி பின்னாளில் திரைப்பாடல்களிலும் புதிய வடிவில் மீண்டும் தோன்றுகிறது.

 

கல்விக் களியின் மயக்கத்தால்

கலை போய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்

நீள்பொன் கபாடம் திறமினோ! (கலிங்கத்து பரணி: 34)

“இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை…” என்ற எங்கள் தங்க ராஜா என்ற திரைப்படப் பாடலில்

‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்’ என்ற வரிகள் கலிங்கத்துப் பரணியின் வரிகளை நினைவுபடுத்தும்

போன்ற திரைப்பாடல்களை ஆராய்ந்து பார்த்தால், அவை வெறும் காதல் பாடல்கள் அல்ல; குறிஞ்சி திணையின் புணர்தல் உணர்வை நவீன மொழியில் மீளுருவாக்கும் பாடல்களாகக் காணப்படுகின்றன. இரவு, நிலா, அணைதல், குளிர்ச்சி, இயற்கை ஒளி போன்ற கூறுகள் குறிஞ்சி திணையின் அடிப்படை உரிப்பொருள்களாகவே அமைகின்றன. “நிலவினை எடுக்கும் ஆடை” போன்ற காட்சிகள் சங்க இலக்கியக் கற்பனையின் நவீன வடிவங்களாகப் புரிந்துகொள்ளப்படலாம்.

அதேபோல் முல்லை திணையின் “இருத்தல்” அல்லது “காத்திருத்தல்” உணர்வு தமிழ் இசையில் மிக ஆழமாக தொடர்கிறது. சங்க இலக்கியங்களில் முல்லை திணை பெரும்பாலும் காத்திருப்பின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. கணவன் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் தலைவியின் உணர்வு, தனிமை, நம்பிக்கை, சோகம், மெதுவான நேர ஓட்டம் ஆகியவை முல்லைத் திணையின் முக்கிய கூறுகள்.

இந்த உணர்வு நவீன திரையிசையிலும் மிக வலுவாகத் தொடர்கிறது.

“நீ வருவாய் என நான் இருந்தேன்…” (திரைப்படம்: சுஜாதா) போன்ற பாடல்கள் முல்லைத் திணையின் நவீன வடிவங்களாகக் கருதப்படலாம். இப்பாடல்களில்:

காத்திருத்தல்,

தனிமை,

உறக்கமின்மை,

நினைவு,

அமைதியின்மை

போன்ற உணர்வுகள் இசையின் வழியே வெளிப்படுகின்றன. சங்க காலத்தில் தலைவி தோழியிடம் கூறிய உணர்வுகள், இன்றைய திரையிசையில் தனிப்பட்ட மனஅனுபவங்களாக மீண்டும் தோன்றுகின்றன.

குறிப்பாக சோக உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் பெரும்பாலும் மக்களிடையே நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கத்திய கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் இசையை “the sweetest songs are those that tell of saddest thought” என்று குறிப்பிட்டார். தமிழிலும் இதே உணர்வு காணப்படுகிறது. “சுகராக சோகம் தானே” (திரைப்படம்: முதல் மரியாதையை) என்று நவீனப் பாடல் வரிகள் சொல்வது இதே உணர்வின் தொடர்ச்சி.

இதனால் முல்லை மற்றும் பாலை திணைகளின் காத்திருப்பு உணர்வுகள் தமிழ் இசை மரபில் தொடர்ந்து முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக மெதுவான ராகங்கள், மெல்லிய இசை ஓட்டங்கள், இரவு அல்லது மழைக் காட்சிகள், தனிமை சார்ந்த காட்சியமைப்புகள் ஆகியவை முல்லைத் திணை உணர்வுகளின் நவீன இசை வடிவங்களாகப் பார்க்கப்படலாம்.

ஆனால் சங்க இலக்கியங்களுக்கும் நவீன திரையிசைக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடும் உள்ளது. அது “திணை மயக்கம்” ஆகும். சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மிகவும் தெளிவான சூழலியல் மற்றும் உணர்ச்சி எல்லைகள் இருந்தன. குறிஞ்சியின் உணர்வு முல்லையில் கலக்காது; நெய்தலின் காட்சிகள் மருதத்தில் இடம் பெறாது. ஆனால் நவீன திரையிசையில் பல திணைக் கூறுகள் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகின்றன.

ஒரு பாடலில் மலைக் காட்சிகளும் கடற்கரை உணர்வுகளும் சேர்ந்து வரலாம். இரவுக்கான இசையோடு பகல் காட்சிகள் சேரலாம். நாட்டார் இசை ஓட்டத்தில் செவ்வியல் ராகங்கள் கலக்கலாம். மேற்கத்திய இசைக்கருவிகளோடு தமிழ்நாட்டு நாட்டுப்புறத் தாளங்கள் இணைக்கப்படலாம். இதுவே “திணை மயக்கம்” என்று குறிப்பிடத்தக்க ஒரு நவீன பண்பாட்டு நிகழ்வாகக் கருதப்படலாம்.

இருப்பினும், இந்த மயக்கத்திற்குள்ளும் திணையின் அடிப்படை உணர்வு அமைப்புகள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. மாறாக அவை புதிய வடிவங்களில் தொடர்ந்து உயிரோடு இருக்கின்றன. பாடலின் களம், இசை ஓட்டம், காட்சியமைப்பு, இயற்கை உருவகங்கள், உணர்வு அமைப்பு ஆகிய அனைத்தும் திணையின் நீண்ட பண்பாட்டு நினைவுகளை இன்னும் தக்கவைத்திருக்கின்றன.

இதனால் தமிழ் திரையிசையை வெறும் பொழுதுபோக்கு வடிவமாக அல்லாமல், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வளர்ந்து வந்த தமிழிசை–திணை மரபின் நவீன வெளிப்பாடாகப் புரிந்துகொள்ள வேண்டும். திணை, பண், நாட்டார் இசை, செவ்வியல் இசை, பக்தி இசை, திரையிசை ஆகியவை தனித்தனி உலகங்கள் அல்ல; ஒரே நீண்ட தமிழ்ச் சூழலியல்–அழகியல் மரபின் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களாகும்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பதில்லை என்ற பொதுவான கருத்து பரவலாகக் காணப்படுகிறது. இதனை வெறும் தலைமுறை இடைவெளி (generation gap) என்ற சொல்லால் மட்டும் விளக்க முடியாது. சில குழந்தைகள் அல்லது இளம் தலைமுறையினர் பழைய பாடல்களை ஆழமாக ரசிக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கு அந்த இசை மரபைப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன என்பதே ஆகும். இசையை எவ்வாறு சுவைக்க வேண்டும், அதன் பின்னணியில் உள்ள உணர்வு, நிலம், காலம், மொழி, காட்சி ஆகியவற்றை எவ்வாறு உணர வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்காத சூழலில், இசை வெறும் ஒலியாக மட்டுமே மாறிவிடுகிறது. இதனால் இசை அனுபவம் ஆழமற்றதாகிறது.

இன்றைய இசை வடிவங்களில் வேகம், அதிர்வு, பீட், மின்னணு ஒலி ஆகியவை அதிகரித்துள்ளன. சில சமயங்களில் இசை என்பது “இசை” என்பதைக் காட்டிலும் “இரைச்சல்” (noice) என்ற நிலைக்கே மாறிவிட்டதாகக் கூறலாம். இதனை முழுமையாக மறுப்பது சரியான அணுகுமுறை அல்ல; ஏனெனில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அதன் சொந்த இசை வடிவங்கள் உருவாகும். இருப்பினும், பல சமகாலப் பாடல்களில் மனித உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு குறைந்து காணப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த மாற்றத்தை சமூக–பொருளாதார மாற்றங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக 1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் (Globalization) மற்றும் நுகர்வுவாதம் (Consumerism) இந்திய சமூக வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த புதிய உலகம் மனிதனை இயற்கையிலிருந்து மட்டுமல்ல, அவனுடைய உழைப்பிலிருந்தும், உறவுகளிலிருந்தும், அழகியல் அனுபவங்களிலிருந்தும் அந்நியப்படுத்தி உள்ளது.

மார்க்சிய சிந்தனையில் அயன்மையாதல் அல்லது “அந்நியமாதல்” (Alienation) என்பது மனிதன் தன் உழைப்பின் பொருளிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையை குறிக்கிறது. மனிதன் எதற்காக உழைக்கிறான், யாருக்காக உற்பத்தி செய்கிறான் என்பதைக் கூட அறியாத நிலையை மார்க்ஸ் விவரிக்கிறார். ஆனால் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இந்த அந்நியமாதல் பொருளாதார துறையைத் தாண்டி அழகியல் துறையிலும் நிகழ்கிறது. மனிதன் இயற்கையிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான்; இசையிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான்; கலை அனுபவத்திலிருந்தும் அந்நியப்படுத்தப்படுகிறான்.

இந்த மாற்றத்தை விளக்குவதற்கு மரப்பாச்சி பொம்மை - ‘பார்பி டால்’ (barbie doll) ஆகியவற்றின் ஒப்பீடு முக்கியமானது. மரப்பாச்சி பொம்மை ஒரு திறந்த கற்பனை உலகத்தை குழந்தைக்கு வழங்குகிறது. ஒரு சிறுமி அந்தப் பொம்மையை தாயாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், குழந்தையாகவும் கற்பனை செய்ய முடியும். அதன் வடிவம் நிலையானதல்ல; குழந்தையின் கற்பனைக்கு ஏற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் குழந்தையின் படைப்பாற்றல் விரிவடைகிறது.

ஆனால் தொழில்மயமாக்கப்பட்ட நுகர்வு உலகின் சின்னமாக விளங்கும் “பார்பி டால்” அப்படியல்ல. அது ஏற்கனவே முழுமையாக வடிவமைக்கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட ஒரு உருவம். அதனுடன் குழந்தை கொண்டிருக்கும் உறவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. அது குழந்தையின் கற்பனையை விரிவாக்குவதில்லை; மாறாக கற்பனையை ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகிறது. இந்த வேறுபாடு அழகியல் அனுபவத்தின் இயல்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

இதே மாற்றத்தை விளையாட்டுகளிலும் காணலாம். மரபு விளையாட்டுகளான கிட்டிப்புள், பம்பரம் போன்றவை மிக எளிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. குழந்தைகள் தாமாகவே மரக்குச்சிகளை வெட்டி கருவிகளை உருவாக்கி விளையாடினர். விளையாட்டு என்பது ஒரு படைப்பாற்றல் செயல்பாடாக இருந்தது. ஆனால் நவீன உலகில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் அதிக செலவு, தொழில்நுட்பம், சந்தை சார்பு ஆகியவற்றோடு இணைந்துள்ளன. விளையாட்டு குழந்தைகளின் படைப்பாற்றலிலிருந்து விலகி நுகர்வு பொருளாக மாறியுள்ளது.

இதேபோன்று இசையும் மாறியுள்ளது. பாரம்பரிய இசை மனிதனின் வாழ்வோடு நெருக்கமாக இருந்தது. இயற்கையின் ஒலிகள், மனித உழைப்பின் தாளங்கள், நிலத்தின் உணர்வுகள், காலத்தின் ஓட்டம் ஆகியவற்றிலிருந்து இசை தோன்றியது. ஆனால் இன்றைய இசை பெரும் தொழில்நுட்ப அமைப்புகள், மின்னணு கருவிகள், பிரம்மாண்ட அரங்குகள், சந்தைத் தேவைகள் ஆகியவற்றோடு இணைந்துள்ளது. இதனால் இசை அதன் சூழலியல் வேர்களிலிருந்து மெல்ல மெல்ல விலகுகிறது.

இந்த நிலையை திணை அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். திணை என்பது நிலம், பொழுது, கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பு. இசையும் இந்த அமைப்பிலிருந்தே தோன்றுகிறது. ஒரு இசையை அதன் நிலத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. ஏனெனில் இசை என்பது வெறும் ஒலி அல்ல; அது ஒரு இடத்தின் நினைவு, ஒரு காலத்தின் அனுபவம், ஒரு சமூகத்தின் உணர்வு.

ஒரு பாடலை நாம் கேட்கும் போது, அந்த இசை நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒரு மலைப்பகுதியின் குளிர்ச்சி, ஒரு கடற்கரையின் தனிமை, ஒரு மழைக்கால மாலை, ஒரு பசுமை நிலம் ஆகியவை இசையின் வழியே நம் நினைவகத்தில் உயிர்ப்படைகின்றன. இசை என்பது நினைவின் பயணம். அது காலத்திலும் இடத்திலும் நம்மை நகர்த்துகிறது. இதனால் இசை என்பது ஒரு “சூழலியல் நினைவகம்” என்றும் கூறலாம்.

திரையிசையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு திரைப்படப் பாடலை நுட்பமாக ஆராய்ந்தால், அதன் பின்னணியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளின் உணர்வு அமைப்புகள் தொடர்ந்து செயல்படுவதை காண முடியும். காதல், காத்திருத்தல், பிரிவு, மகிழ்ச்சி, வீர உணர்வு, தனிமை போன்ற உணர்வுகள் குறிப்பிட்ட இசை வடிவங்களோடு இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு உணர்விற்கும், ஒவ்வொரு சூழலுக்கும் தனித்துவமான இசை உருவாக்கப்படுகிறது.

ஆனால் இன்றைய திரையிசையில் நகர வாழ்க்கை, உலக இசை கலப்புகள், மின்னணு தொழில்நுட்பம், மேற்கத்திய பீட் அமைப்புகள் ஆகியவை திணை உணர்வுகளை மாற்றியமைத்துள்ளன. இருந்தபோதிலும், அடிப்படை மனித உணர்வுகள், சூழலியல் நினைவுகள் முற்றிலும் அழிந்து போகவில்லை. அவை இன்னும் இசையின் அடிநிலைகளில் உயிரோடு இருக்கின்றன.

இதனால் திணையை விட்டு இசையை பிரித்துப் பார்க்க முடியாது. இசை அதன் நிலம், பொழுது, உணர்வு, சமூக நினைவு ஆகியவற்றோடு இணைந்திருக்கும்போது மட்டுமே அதற்கு உயிரோட்டம் கிடைக்கிறது. அந்த உறவை இழந்த இசை வெறும் இரைச்சலாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே தமிழிசையின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், திணை அடிப்படையிலான சூழலியல்–அழகியல் பார்வையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வகையில் திணை இயல் என்பது வெறும் பழமையான இலக்கியக் கோட்பாடு அல்ல; அது தமிழரின் இசை, நினைவு, உணர்வு, கலை மற்றும் வாழ்வியலைப் புரிந்துகொள்ளும் உயிருள்ள மெய்யியல் அமைப்பாக இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 



Comments


PAMAYAN.ORG

© Pamayan. All Rights Reserved

bottom of page